மதுரை:2018ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குத்தொடர்பாக 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை மாவட்டம், வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் 19ஆவது குற்றவாளியாக இருக்கக்கூடிய முத்துச்செல்வன் என்பவர், நேற்று திடீரென சிறை வளாகத்திற்குள் சிறைக் கைதிகளுக்காக வழங்கக்கூடிய தோல் மற்றும் சிரங்கு உள்ளிட்ட பாதிப்புக்கு வழங்கக்கூடிய மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்ட சிறைக்காவலர்கள் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறை நிர்வாகம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருக்கு இடையே ஏற்பட்டத்தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்துச்செல்வன் நேற்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இருப்பினும் தொடர்ந்து முத்துச்செல்வனுக்கு சிறை வளாகத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆயுள் தண்டணை கைதி சிறை வளாகத்திற்குள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் பண மோசடி