ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீர செல்வம். இவரது மனைவி கவிதா. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு ஆடு, மாடு, நாய் ஆகியன இறந்ததாக கூறப்படுகிறது.
தந்தையை உசுப்பேற்றிய ஊரார்:
இதற்கு இறந்து போன கவிதா தான் காரணம் என அப்பகுதியினர் வீரசெல்வத்தை அச்சுறுத்தியுள்ளனர். இதனிடையே அவரின் சமாதிக்கு சென்று வழிபட்டு திரும்பிய மகள் தாரணிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
'உடல்நிலை சரியில்லாத மகளை பேயோட்ட அழைத்துச் சென்ற தந்தை' - மாணவி மர்மமான முறையில் மரணம் இந்நிலையில் கவிதா தான் அவரது மகள் மீது பேயாக இறங்கியுள்ளார் என ஊரார் சிலர் தந்தை வீர செல்வத்திடம் கூறியுள்ளனர். அதனை நம்பிய தந்தை மகள் தாரணியை திருப்பாலைக்குடியில் கோடாங்கியிடம் (பூசாரி) அழைத்துச் சென்று பூஜை செய்துள்ளார். அப்போதும் தாரணிக்கு உடல் நிலை சரியாகவில்லை.
வீண் வித்தைகளை காட்டிய கோடாங்கி:
இதனால் மனமுடைந்த தந்தை அடுத்ததாக வாணி என்கிற பகுதியில் உள்ள பெண் பூசாரியிடம் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண் பூசாரி நடத்திய பூஜையில் அவர் சாட்டை, பிரம்பு ஆகியவற்றை கொண்டு தாரணியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த தாரணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், மீண்டும் பேய் ஓட்டுகிறேன் என்ற பெயரில் பூஜைகளைத் தொடர்ந்திருக்கிறார். குறிப்பாக மிளகாய் வத்தலை தீயில் சுட்டு தாரணியின் மூக்கில் வைத்த போதும் மயக்கம் தெளியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பெண் பூசாரி தாரணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
தந்தையின் மூடநம்பிக்கை உச்ச கட்டம்;
இதனையடுத்து தாரணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் தாரணிக்கு டைபாய்ட் காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் குருட்டத்தனமான மூட நம்பிக்கையில் மூழ்கி போயிருந்த வீர செல்வம், மீண்டும் ஒரு முறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்து சென்றால் உடல் நிலை சரியாகிவிடும் எனக் கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பரிதாபமாக உயிரிழந்த மாணவி :
அன்று நள்ளிரவே தாரணிக்கு மீண்டும் கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டதால் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளதாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி காவல்துறையினர் தாரணியின் தந்தை, சகோதரர், திருப்பாலைக்குடி கோடாங்கி, வாணியைச் சேர்ந்த பெண் பூசாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை குத்திக் கொன்று தப்பித்தபோது வாகன விபத்தில் மருத்துவர் காயம்