கரூர்: கரூர் மாவட்டம் அமிர்தபுரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34), தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 8) இரவு 9 மணியளவில் கரூரிலிருந்து தென்னிலை நோக்கி பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் கோவை நெடுஞ்சாலை கரைப்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கோவையில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று சுரேஷ் மீது மோதியது.
அதில், சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், சாலையின் ஓரமாக நடந்து சென்ற 8 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.