சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (நவ. 19) இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது டுலல் சன்ட்ரா (38) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டில் ஒரு ஆண் பயணி வந்தார். குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது.
உடனடியாக அந்த பயணியை வெளியே விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனா். மேலும் குடியுரிமை அதிகாரிகள், ஒன்றிய உளவு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு போலீசாா், அந்த பயணியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினா். அப்போது அந்த பயணி, வங்க தேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.