சென்னை:மாணவனைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்ற ஐந்து பேரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் சீத்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர், அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். இவரது மகன் கணேசன் (19) தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மெக்கானிக்கல் கல்வி 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இச்சூழலில், ஜூன் 15ஆம் தேதி இரவு கணேசன் தனது நண்பர்களான சக்திவேல், ரங்கசாமி ஆகியோருடன் ஆவடி, தனியார் கல்லூரி பின்புறம் உள்ள காலி மைதானத்தில் மது அருந்தியுள்ளார்.
அப்போது, அங்குவந்த சிலர், மது அருந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், கணேசன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், ஆவடி கோணாம்பேடு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற கணேசன் தரப்புக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில், கணேசன் தரப்பை விஷ்ணு கும்பல் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் கணேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும், நண்பர்கள் ரங்கசாமி, சக்திவேல் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசன் சிகிச்சைப் பலனின்றி கணேசன் ஜூன் 17ஆம் தேதி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து கணேசனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், கொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்ற கோணாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சார்ந்த உமாபதி (23), அதே பகுதி ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த யுவராஜ் (23), நேரு தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (23), ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (24), விஷ்ணு (24) ஆகிய 5 பேரைக் கைதுசெய்தனர். பின்னர், அனைவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.