சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி கன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(28). இவர் அதே பகுதியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 27ஆம் தேதி பூபாலன் 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை ராயப்பேட்டை எஸ்பிஐ வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 6 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியால் அவரை வெட்டி பணத்தை பறித்து சென்றனர்.
ரூ. 20 லட்சம் கொள்ளை:இதுதொடர்பாக, பூபாலன் அளித்த புகாரின் பேரில் அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பணபறிப்பில் ஈடுபட வந்தவர்களின் இருசக்கர வாகனப் பதிவு எண்களை சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூபாலன் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தங்கம் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய குருவியாக செயல்பட்டு வந்ததும், அதே போல விற்பனை செய்த பணத்தை பூபாலன் கொண்டு செல்லும்போதுதான் 6 பேர் கொண்ட கும்பல் பண பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
5 பேர் கொண்ட தனி கும்பல்: இதனையடுத்து, சிசிடிவி மற்றும் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து, பூந்தமல்லி கரையான் சாவடியில் பதுங்கியிருந்த ராஜேஷ்(31) என்பவரை அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் விருகம்பாக்கத்தை சேர்ந்த பாக்கியராஜ்(43) மற்றும் கே.கே. நகரை சேர்ந்த ஷேக் இஸ்மாயில்(54) ஆகியோரை பாரிமுனையில் கைது செய்தனர்.