தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் - newstoday

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்செய்துள்ளது.

Anil Deshmukh
Anil Deshmukh

By

Published : May 2, 2021, 1:04 PM IST

மகாராஷ்டிர மாநில முன்னாள் உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஊழல் செய்ததாக கூறப்படும் வழக்கில், தொடர் விசாரணை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நேற்று (மே 1) விசாரணை அறிக்கையைத் தாக்கல்செய்தது. இந்த அறிக்கை, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

அனில் தேஷ்முக் ஊழல் செய்ததாக கூறி முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை செய்யும்படி குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து 15 நாள்களில் ஆரம்பகட்ட விசாரணையை முடிக்கும்படி சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மும்பை குற்றப்பிரிவு அலுவலர் சச்சின் வாஸே என்பவரிடம் மும்பையிலுள்ள பார், ரெஸ்டாரெண்ட்களில் மாதாமாதம் ரூ.100 கோடி வசூலித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக அனில் தேஷ்முக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த ஏப். 14ஆம் தேதி தேஷ்முக்கிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்.

அண்மையில், தேஷ்முக்குக்குச் சொந்தமான மும்பை, நாக்பூர் இல்லங்கள் உள்பட நான்கு முக்கிய இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரர் டாக்டர் ஜெய்ஷ்ரி பாட்டீல், முன்னாள் மும்பை ஆணையர் பரம்பீர் சிங், சச்சின் வாஸே ஆகியோரின் அறிக்கைகளையும் சிபிஐ பதிவுசெய்துள்ளது.

இது குறித்து சிபிஐ மூத்த அலுவலர் கூறுகையில், பல்வேறு தேடல் நடவடிக்கைகளின்போது இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், பல சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் இந்த அறிக்கை அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details