சென்னை: பண மோசடி வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக, காவல் ஆணையரை நேரில் சந்தித்து நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்தார்.
நடிகர் ஆர்யா மீது இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட, ஜெர்மனியில் குடியுரிமை பெற்ற பெண் வித்ஜா பண மோசடி புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முதல் பெயராக நடிகர் ஆர்யாவும், அடுத்ததாக அவரது தாய் ஜமீலாவும், முறையே ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி முகமது அர்மான், முகமது ஹூசைனி ஆகிய நால்வர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடைசியாக இடம்பெற்ற இருவரையும் உதவி ஆணையர் ராகவேந்திரா கே. ரவி தலைமையில் ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்ட தனிப்படையினர் ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் வைத்து ஆகஸ்ட் 24ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
பதில் சொல்ல மறுத்த ஆர்யா
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கிற்கும் ஆர்யாவுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என ஒன்றிய குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மோசடி வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்த சென்னை காவல் துறைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று (செப். 02) நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மதியம் 2.30 மணியளவில் வந்தார்.
15 நிமிடங்கள் காவல் ஆணையருடன் நடிகர் ஆர்யா சந்தித்துப் பேசினார். பின்னர் நன்றி செலுத்திவிட்டு, தனது காரில் நடிகர் ஆர்யா புறப்பட்டார்.
காவல் ஆணையரை சந்திக்க வந்த நடிகர் ஆர்யா அப்போது வெளியே வந்த ஆர்யாவிடம், காவல் ஆணையர் சந்திப்பு குறித்தும், குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எந்தப் பதிலும் அளிக்காமல், காரில் ஏறி சென்றுவிட்டார்.
யார் இந்த வித்ஜா
ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண் வித்ஜாவுக்கும், நடிகர் ஆர்யாவுக்கும் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாகவும்; பிறகு தனது காதலை வித்ஜாவிடம் வெளிப்படுத்தி, அவரைத் திருமணம் செய்வதாக ஆர்யா உறுதியளித்ததாகவும் வித்ஜா தரப்பில் கூறப்படுகிறது.
கரோனா காலத்தில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும்; கடன் பிரச்னையில் சிக்கி உள்ளதாகவும் கூறி, நடிகர் ஆர்யாவும் அவரது தாய் ஜமீலாவும் வித்ஜாவிடம் 80,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,40,000) வரை பணம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆர்யா- சாயிஷா திருமணம் குறித்து வித்ஜா கேட்டபோது, 'இன்னும் ஆறு மாதங்களில் ஆர்யா- சாயிஷாவுக்கு விவாகரத்து நடக்கும். அது வெறும் படப்பிடிப்புக் கல்யாணம்' என ஆர்யா தரப்பில் கூறப்பட்டதாகவும் வித்ஜா தெரிவித்தார்.
சந்தேகத்தை ஏற்படுத்திய வழக்கின் திருப்பம்
ஆர்யாவைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளத்தில், நடிகர் ஆர்யா என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, வித்ஜாவிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்தச் செயலுக்கு அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் உடந்தையாக இருந்துள்ளதாகவும் காவல்துறை தரப்புக் கூறுகிறது.
வித்ஜா தரப்பு எழுப்பும் கேள்விகள்
வித்ஜா தரப்பில் பேசுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ராஜபாண்டியன் கூறும்போது, "இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் பார்த்து வந்த ஆர்யாவை வித்ஜாவுக்கு அடையாளம் தெரியாமல் இல்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், ஆர்யா தரப்பு என்ன நடக்க வேண்டும் என்பதை ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்கள்.
இந்த வழக்கில் கைதான அர்மான் எந்த எண்ணை உபயோகப்படுத்தினார், எங்கிருந்து பயன்படுத்தினார் என்ற விவரங்கள் எல்லாம் நிச்சயம் எடுக்க முடியும் அல்லவா?
வீடியோ கால் பேசியதற்கான ஆதாரம் இல்லாததுதான், தற்போது அவர்களுக்குச் சாதகமாய் போய்விட்டது. ஆர்யா மீது வழக்குத் தொடுத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல், வாய் திறக்காமல் விசாரணைக்கு மட்டும் பெயருக்கு வந்து போனார்கள். இப்போது ஆள்மாறாட்டம் எனக் கூறுவதை, சிறு குழந்தை கூட ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆள்மாறாட்ட கைது நடவடிக்கை உண்மை என்றால், ஆறு மாதங்களுக்கு முன்பே அந்த கைபேசி எண், சமூகவலைதளக் கணக்கு என்னுடையது அல்ல, போலியானது. என்னுடைய எண்ணைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என ஆர்யா புகார் கொடுத்திருக்கலாமே," என்று கேள்வி எழுப்பினார்.
முதல் இரண்டு பேரை கைது செய்யாதது ஏன்
இந்த வழக்கானது நேற்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து காவல் துறை பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3 மற்றும் 4ஆவது குற்றவாளி.
முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சேர்த்துள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா மீது மோசடிப் புகார் அளித்தார். ஆனால், நடிகர் ஆர்யா தன்னைப் போல நடித்து, ஏமாற்றியதாக கைதானவர்கள் மீது ஒரு புகாரும் அளிக்கவில்லை.
ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேட்டுக் கடிதம் எழுதி இருக்கிறோம். நடிகர் ஆர்யா பேசிய அனைத்து குறுஞ்செய்திகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்.
நடிகர் ஆர்யா தனது செல்போன் எண்ணில் ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்தில் தான் இருப்பதால், தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்ற ஆதாரங்களும் உள்ளன.
உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்றார்.