தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன் - ஹாஜிரா தம்பதி. இவர்களுக்கு, ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தூக்கம் கலைந்த ஹாஜிரா கண்விழித்தபோது தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாததால் திடுக்கிட்டு சத்தம் போட்டுள்ளார்.
குழந்தையின் உடல் உடற்கூராய்வு
அப்போது அவரது கணவர், மாமியார் அனைவரும் அந்தக் குழந்தையைத் தேடியபோது, வீட்டின் பின்புறம் மீன் வைக்கும் தொட்டியில் நீரில் மூழ்கியவாறு இறந்துகிடந்துள்ளது. பின்னர் குடும்பத்தினர், ஜமாத்தார்கள் கலந்துபேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் குழந்தையின் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
இந்நிலையில், இந்தத் தகவல் அப்பகுதியின் தலையாரி சுதாகருக்குத் தெரியவர உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்குத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் சேதுபாவாசத்திரம் காவல் துறையில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை தொடங்கினர். மேலும், அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தோண்டி எடுத்தனர்.