சென்னை: ஆயிரம் விளக்கு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்( 22). இவரது நண்பர் ஷாமின் மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்றிரவு புதுப்பேட்டை லப்பை தெருவிற்கு கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு மோகன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது, இரண்டு நபர்கள் கையில் ராடு வைத்துக்கொண்டு ஷாமை விசாரித்து சென்றதாக அங்கிருந்த நபர்கள் மோகனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோகன் அவரது நண்பர்களான சந்தோஷ், ஷாம், சுனில்குமார், மனோஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஏரியாவில் ஷாமை விசாரித்து சென்ற நபர்களை தேடி புதுப்பேட்டையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனிற்கு சென்றனர். அங்கு ஷாமை தேடி வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருந்ததால், இரண்டு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
எதிர் கோஷ்டி திடீரென கத்தியை எடுத்ததால் மோகன் உள்பட அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். புதுப்பேட்டை அய்யாசாமி தெரு வழியாக மோகன் தப்பித்து ஓடி அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்து ஒளிந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிலிருந்த பெண் கூச்சலிட்டு திடீரென வெளியே ஓடி வந்ததால், இதனை அறிந்து சுற்றி வளைத்த கும்பல் மோகனை வீட்டிலேயே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.