ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட கொண்டாமுத்தனூர் காலனியில் வசித்துவருபவர் பழனியம்மாள் (60).
இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கம்பெனி விளம்பரத்திற்காக இலவசமாக தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர்.
உங்களிடம் தங்க நகைகள் இருந்தால் தாருங்கள் நாங்கள் பாலிஷ் செய்து தருகிறோம் எனக் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய பழனியம்மாள் தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை கழற்றிக் கொடுத்துள்ளார்.
அந்த இளைஞர்கள் குக்கரில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு கலக்கி அதில் தங்க நகையை அலசுவதுபோல நாடகம் ஆடியுள்ளனர். பின்பு குக்கரை மூடியால் மூடி ஐந்து நிடமிடம் அடுப்பில் வைத்து எடுத்தால் நகை பளபளப்பாகி விடும் எனக் கூறி சென்றுள்ளனர்.
அதனை நம்பி, குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி ஐந்து நிமிடம் கழித்து எடுத்த பார்த்த பழனியம்மாள் குக்கரில் தங்க நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சாமர்த்தியமாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் மூதாட்டியை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்ற இளைஞர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:ரயில் பயணிகளிடம் ஸ்மார்ட் போன்கள் திருடிய வடமாநில இளைஞர் கைது!