தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

விருத்தாசலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2003 honor killed murugesan
2003 honor killed murugesan

By

Published : Oct 17, 2021, 4:36 PM IST

கடலூர்: விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 2003ஆம் ஆண்டு புதுக்கூரை பேட்டையைச் சேர்ந்த மருது பாண்டியின் தங்கை கண்ணகியைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

கொடூர கொலை

முருகேசன் - கண்ணகி திருமணம் செய்துகொண்டது பெண் வீட்டாருக்கு தெரிந்ததால், அப்போதைய விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை முருகேசன் தங்க வைத்திருந்தார்.

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி அன்று முருகேசனைப் பிடித்து வைத்தனர்.‌

மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள், முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன், கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச்சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.

நீதிமன்றம் தீர்ப்பு

இது சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி, கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் வசித்து வந்த முருகேசனின் தாய் சின்னப்பிள்ளை கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில், தன் வீட்டின் வாசலில் இருந்தபோது சில நபர்களால் தாக்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

முருகேசன் தாயார் மீது தாக்குதல்

இதுதொடர்பாக சின்னப்பிள்ளையிடம் விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதி, வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தார்.

அதில் அவர், 'சின்னப்பிள்ளையை புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் சுந்தரமூர்த்தி, தேவர் மகன் வரதராசு, பச்சமுத்து மகன் பாக்கியராஜ், குமார் மகன் சதீஷ்குமார், சண்முகம் மகன் வெங்கடேசன், ராமலிங்கம் மகன் ராஜிவ் காந்தி, வெங்கடேசன் மகன் வினோத்குமார் ஆகியோர் தன்னை தகாத வார்த்தையால் திட்டியும், கம்பால் அடித்தும் எட்டி உதைத்தும் தாக்கியதாக' வாக்குமூலம் அளித்தார்.

இதனடிப்படையில் ஆறு பிரிவுகளில் 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை இது சம்பந்தமாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் கண்ணகி முருகேசன் வழக்கை நடத்தி வந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம், சின்னப்பிள்ளையைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு - வெடிக்கும் புதிய சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details