தஞ்சாவூர்: மளிகைக் கடையின் பெயரில் போலி டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய அரசியல் கட்சியைச் சேர்ந்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராசாரியார் தெருவில் அமைந்துள்ள பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ள டோக்கன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
டோக்கனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது, “நான் யாருக்கும் டோக்கனிற்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை. தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு அது போலி டோக்கன் என்று புரிந்ததுள்ளது.
ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே, அவர் மளிகை கடையை பூட்டிவிட்டு, கடையின் கதவில், “வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கனிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனிற்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது" என அச்சடித்து கதவில் ஒட்டிச் சென்றுவிட்டார்.
விநியோகிக்கப்பட்ட டோக்கன் இதுகுறித்து கடையின் உரிமையாளர் சேக் முகமது கூறும்போது, “ நான் 25 வருடமாக இங்க கடை நடத்தி வருகிறேன். நான் அதிமுக கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் யாரோ ஒருவர் வாக்காளர்களுக்கு டோக்கனை கொடுத்து ஏமாற்றியுள்ளார்” என்று கூறினார். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கி ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.