தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது’ - நாட்டுக்கோழி வளர்க்கும் சாதனைப் பெண்கள்! - நாட்டுக்கோழி பண்ணை

வேலூர்: கேடுகளை உண்டாக்கும் பிராய்லர் கோழிக்கு மாற்றாக, முழுவதும் இயற்கை முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் இரு பெண்கள். எந்தவித செயற்கை தீவனமுமின்றி செடி, புற்கள், மக்காச்சோளம் போன்றவற்றை கொடுத்தே 1500-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து, நல்ல லாபமும் ஈட்டிவருகின்றனர் இவர்கள். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது என்று பெருமிதப்படும் சரிதா, தரணியை பாராட்டுகிறது இச்செய்தித் தொகுப்பு...

farming
farming

By

Published : Mar 11, 2020, 8:21 AM IST

மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் மனிதர்கள் பல்வேறு நோய்களைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக நாற்பதே நாள்களில் வளர்ந்து கறிக்குத் தயாராகும் பிராய்லர் கோழி உள்ளிட்ட சுகாதாரமில்லாத இறைச்சிகளைச் சாப்பிடுவதால் புதுப்புது நோய்கள் உண்டாகின்றன.

இந்தச் சூழலில் வேலூரில் இரண்டு பெண்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத, இயற்கை முறை நாட்டுக் கோழி வளர்ப்பில் அசத்திவருகின்றனர். வேலூரையடுத்த மேலக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரிதா, தரணி ஆகிய இருவரும் மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளனர்.

வாழ்வில் முன்னேற ஏதாவது சுய தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணிய இவர்கள், வங்கியில் கடன்பெற்று தங்கள் சொந்த நிலத்திலேயே கோழிப்பண்ணை அமைத்துள்ளனர். ஆரம்பத்தில் 10 கோழிகளில் தொடங்கி, தற்போது சுமார் 1500 கோழிகளை வளர்க்கும் அளவுக்குத் தங்கள் சுய தொழிலை ஆர்வமுடன் செய்துவருகின்றனர்.

விபத்தில் இரு கால்களையும் இழந்த சரிதாவின் கணவர் ஓராண்டிற்கு முன்புதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், கணவரின் திடீர் மறைவு, சரிதாவை நிலைகுலைய வைத்துள்ளது. இருப்பினும், துணிச்சலுடன் களத்தில் இறங்கி இந்தக் கோழிப்பண்ணையை திறம்பட நடத்திவருகிறார். இதுமட்டுமல்லாமல், மாடுகளை கவனிப்பது, விவசாயம் செய்வது என நாள் முழுவதும் சரிதா பிஸியாகவே இருக்கிறார்.

பண்ணையிலிருந்து தினமும் காலை நிலத்திற்கு மேய்ச்சலுக்கு வரும் கோழிகள், செடி, புற்கள், கீரை வகைகளையே உட்கொள்கின்றன. மேலும், இவற்றுக்கு செயற்கைத் தீவனங்களைத் தவிர்த்து மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட இயற்கை உணவுகளை மட்டுமே உணவாக வழங்குகின்றனர்.

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொதுமக்கள் தற்போது மீண்டும் இயற்கை உணவுகளைத் தேடிச் செல்வதால் நாட்டுக்கோழி, அதன் முட்டைகளுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சரிதா, தரணி இருவரும் தாங்கள் வளர்க்கும் கோழிகளை சந்தைகள், வீடுகளில் நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

மகளிர் குழு மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இத்தொழிலை இவ்விருவரும் செய்துவருகிறார்கள். பிராய்லர் கோழியை தற்போது மக்கள் நாடுவது குறைந்துள்ளதால், நாட்டுக்கோழியின் விலை, கிலோ 150 ரூபாயிலிருந்து 250 வரை விற்பதாகக் கூறும் தரணி, இத்தொழிலால் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற திருப்தி ஏற்படுவதாகக் கூறுகிறார்.

தங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையில் சுய தொழிலில் சிறந்து விளங்கும் இந்த இரண்டு பெண்களின் செயல், ஊர் பொதுமக்களைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. யாரையும் நம்பாமல் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் இவ்விருவரும், இச்சமுதாயத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்றால் அது மிகையல்ல.

’மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது’ - நாட்டுக்கோழி வளர்க்கும் சாதனைப் பெண்கள்!

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: பிராய்லர் கோழியின் விலை கடும் சரிவு..!

ABOUT THE AUTHOR

...view details