வேலூர்:அண்ணா சாலையில் அமைந்துள்ள தெற்கு காவல் நிலையம் அருகே நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் ஒரு பெண்ணிண் அலறல் சத்தம் கேட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பெண்ணின் அலறலைக் கேட்டபோது, இரவு பணிக்கு வந்துகொண்டிருந்த பெண் தலைமைக்காவலர் இளவரசி ஓடிச்சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அங்கு நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்துள்ளார். அருகில் 10 வயதில் ஒரு சிறுவனும் இருந்துள்ளார். இந்த நிலையில் செய்வதறியாது திகைத்து நின்ற பெண் காவலர் இளவரசி, உதவிக்கு சக காவலர்களை அழைக்கச்சென்ற நேரம் அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலென்ஸிற்குப்போன் செய்து பெண்ணையும், சிசுவையும் மீட்டு அருகில் உள்ள வேலூர் பெண்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான உதவியும் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். நள்ளிரவில் பெண் காவலரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.