தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீர்மிகு திட்டப்பணிகளின் பேரில் சீரற்று கிடக்கும் வேலூர்! - குண்டும் குழியுமான சாலைகள்

வேலூர்: சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் வேலூர் மாநகர சாலைகள் அனைத்தும் உருக்குலைந்து காணப்படுகின்றன. இதனால் நாளும் மக்கள் படும் அவதியை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.

damage
damage

By

Published : Jan 20, 2021, 8:04 PM IST

நகராட்சியாக இருந்த வேலூர் கடந்த 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், பெயரில் மட்டுமே மாநகராட்சியே தவிர, அதற்கான எந்த அடிப்படை வசதிகளும் 12 ஆண்டுகளாக செய்யப்படாமலேயே உள்ளன. இந்நிலையில்தான், வேலுாரை சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. 379 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தமுள்ள 60 வார்டுகளில் 209.4 கி.மீ., துாரத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இப்பணிகள் ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாகாயம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, சேண்பாக்கம், கொணவட்டம், கஸ்பா உள்பட மாகராட்சியின் அத்தனை பகுதிகளிலும் உள்ள தெருக்களும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. வெட்டப்பட்ட சாலைகளை மீண்டும் சமன் செய்யாமலும், தோண்டும் போது வெளியேறிய மணலை ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டும் சென்றுள்ளதால், சாலைகள் படுகுழியுடனும், வீடுகளில் தூசு ஏறியும் காட்சியளிக்கின்றன.

சீர்மிகு திட்டப்பணிகளின் பேரில் சீரற்று கிடக்கும் வேலூர்!

தெருக்களின் இந்த நிலையால் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட உள்ளே வர மறுப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். அண்மையில் பெய்த மழையால் தெருக்கள் சேறும், சகதியுமாக கிடக்கின்றன. பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து, தேங்கியுள்ள மழைநீருடன் கலந்து கொசு உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொறுமுகின்றனர் அவர்கள். இது தொடர்பாக பலமுறை மாநகராட்சியிடம் மனு அளித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றும் கூறுகின்றனர் மக்கள் ஆதங்கத்துடன்.

இது குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் நாம் கேட்டபோது, பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற இடங்களில், மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், மற்ற பகுதிகளிலும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

வேலூரை சீர்மிகு நகராக மாற்றுகிறோம் என்கிற பெயரில் இப்படி அலங்கோலப்படுத்துவதை ஏற்கமுடியவில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள், இது போன்ற நிலையை மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கருப்பசாமி கோயிலை இடித்த விவகாரம்: நடிகர் விமல் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details