முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் 5 பேர் என மொத்தம் 7 பேர், 28 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் விடுதலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஓராண்டு கடந்தும் இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவருகிறார். தங்களை விடுதலை செய்யக் கோரி நளினியும், அவரது கணவர் முருகனும் அவ்வப்போது சிறையில் உண்ணாவிரதம் இருந்தும், அரசுக்கு கடிதங்கள் எழுதியும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
தற்போது நளினி சிறைக்குள் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து சிறைத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "உண்ணாவிரதம் இருப்பதற்காக நளினியும், அவரது கணவரும் மனு அளித்துள்ளனர். ஆனால் எதற்காக உண்ணாவிரதம் என்று தெரியவில்லை” என்றனர்.
வழக்கம்போல் தங்களை விடுதலை செய்யக் கோரியே நளினி உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்பட்டது. இச்சூழலில் நளினியின் உண்ணாவிரதம் குறித்து பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகனை அலுவலர்கள் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும், அவருக்குச் சரிவர உணவுகள் வழங்கவில்லை என்றும், எனவே தனது கணவரை பாதுகாக்கக் கோரியே நளினி உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, சில தினங்களுக்கு முன்பு முருகன் தங்கியிருந்த அறையில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிறை அலுவலர்கள் புகாரின் பேரில், அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மாதம்தோறும் இரண்டு முறை நடைபெறும் நளினி - முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
மேலும், கைப்பேசி பறிமுதல் செய்த விவகாரத்தில் முருகனை தற்போது சிறையில் அலுவலர்கள் தனி அறையில் வைத்திருப்பதாகவும், அவரை வெளியில் எங்கேயும் செல்லவிடாமல் வைத்திருப்பதாகவும் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அவருக்குச் சரியாக உணவுகள் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதன் காரணமாகவே முருகனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். எனவே தனது கணவரைக் காப்பாற்றக் கோரிதான் நளினி சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார் நளினி, முருகன் விடுதலை விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் சிறையில் முருகன் தனிமைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.