வேலூர்: திருப்பத்தூர் அருகே உள்ள விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (23). இவர் முதுகலை குற்றவியல் (Criminology) படித்துள்ளார். திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33). இவர் கணினி மையம் (Computer Centre) நடத்திவருகிறார். இதே கணினி மையத்தில் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து கருவூல அலுவலகங்களிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கப்படும் நிதியை ஆன்லைன் மூலம் திருட முடிவுசெய்தனர்.
இதற்காக, ஆன்லைனில் மோசடி செய்துவரும் பிரபல நபர் ஒருவரை இவர்கள் நாடியுள்ளனர். மோசடி நபர் மூலம் அவர்கள் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வங்கி பண பரிமாற்ற ரகசிய எண், காட்பாடி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் உள்ள பணப்பரிமாற்ற ரகசிய எண் ஆகியவற்றை ஹேக் (Hack) செய்து திருடியுள்ளனர்.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி ரகசிய எண்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 70 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.
பணம் காணாமல்போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.