வேலூர்: அணைக்கட்டு தாலுகா, அப்புக்கல் அருகே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது அருணகிரியூர் கிராமம்.
இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
அவல நிலை
இந்நிலையில், இப்பகுதியில் மக்கள் சுடுகாட்டிற்குச் சென்று வர சாலை வசதிகள் இல்லாததால், ஆற்றுக் கால்வாயில் இறங்கி, சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆற்றுக் கால்வாயில் இறங்கி சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.
கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக ஆற்றுக் கால்வாயில் தற்போது தண்ணீர் செல்கிறது.
இதனால் சமீபத்தில் அக்கிராமத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர், தண்ணீர் செல்லும் ஆற்றுக் கால்வாய் வழியாக சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆற்றுக் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் தருவாயில் உள்ளது.
எனவே, அப்பகுதி மக்கள் தங்களுக்கு முறையான சாலை வசதி அமைத்துத் தருமாறு அரசிடம் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு