வேலூர்:அணைக்கட்டு அருகே ஜமால்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம் திறப்பு விழா நேற்று (மே. 25) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு பால் குளிரூட்டும் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் நாசர், "பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 276 கோடி ரூபாய் பால்வளத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டராக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது உற்பத்தி திறனை அதிகரித்து, நேற்று மட்டும் நாற்பத்தி மூன்று லட்சத்து 14 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தற்போது வெண்மைப் புரட்சி ஏற்பட்டுள்ளது.