வேலூர்: அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காகச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் கூடுதலாகப் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் வேலூர் மாவட்டத்தில் கரோனா வார்டுகளில் பணியாற்றுவதற்காகத் தற்காலிகமாக மருத்துவர்கள், செவிலியர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.
அந்தவகையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கரோனா வார்டில் மட்டும் கடந்த மே 13ஆம் தேதி 90 செவிலியர் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாகப் பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 1) திடீரென 90 பேருக்கும் வேலை இல்லை எனக் கூறி மருத்துவ நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் 90 பேரும் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
இன்று நான்கு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால், இவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பின்னர் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.