திருச்சி:ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவதால், திருச்சி பெல் வளாகத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளாண்டை புதுப்பித்து மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, திருச்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினர். திருச்சி பெல் நிறுவனத்தில் நேரடி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த குறிப்பிட்ட பிளாண்டை புதுப்பிக்க 4 மாதங்கள் வரை ஆகும் என்று பெல் அலுவர்கள் தெரிவித்து வந்தனர். அதோடு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் எம்.பி. திருச்சி சிவா இன்று (மே 18) பெல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் பெல் வளாகத்தில் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தற்போது உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், நோயாளிகளுக்கு போதாத நிலை உள்ளது. அதனால் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு என்னென்ன வழிகள் என்றும், வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) ஏற்கனவே ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதி தற்போது செயலற்று இருக்கிறது. அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என்ற தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக பிரதமருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி பெல் அலுவலர்கள் இதற்கு சாத்தியமில்லை என்றும், புதிய பிளான்ட் ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஆக்ஸிஜன் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, நிபுணத்துவம் பெற்று ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மீண்டும் அதை புதுப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.
அவர்களை அழைத்து வந்து, பெல் நிர்வாகத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறினார்கள். தனியார் மருத்துவமனைகளில் ஒரு நோயாளி குறைந்தபட்சம் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் திருச்சி பெல்லில் உள்ள பிரான்டை புதுபிக்க அதிகபட்சம் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும். 20 நாட்களுக்குள் புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான முடிவு எடுக்க திருச்சி பெல் அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது. இதை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் பெல் அலுவலர்கள் பிளான்டை புதுப்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இதற்கான செலவு தொகை மதிப்பீட்டை தயாரித்து நிர்வாகத்திடம் வழங்க உள்ளனர். ஓய்வு பெற்றவர்கள் சேவை அடிப்படையில் தங்களது அனுபவத்தை இதற்கு பங்களிக்க முன்வந்துள்ளனர். இந்த புதிய ஆக்ஸிஜன் பிளான்ட் உருவாக 4 மாதங்கள் ஆகும். இது தற்போதைய அவசர காலத்திற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?