திருச்சி:மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் நேதாஜி (37) புத்தாநத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர், இன்று (நவ.13) காலை அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் இணைப்பு சம்பந்தமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி கூறிய குடிநீர் சம்பந்தமான கோரிக்கையை விரைவில் சரி செய்வதாக கூறி புத்தாநத்தம் கடை வீதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் வெங்கடேஷ், தினேஷ் உள்ளிட்ட மூவரும் புத்தாநத்தம் கடைவீதியில் துணை தலைவர் நேதாஜியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்து தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் துணை தலைவர் நேதாஜி புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த துணை தலைவர் நேதாஜியின் உறவினர்கள் மற்றும் இடையப்பட்டி பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற புத்தாநத்தம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அடுத்த 2 நாள்களுக்கு குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கனமழை!