திருச்சி:துறையூர் அடுத்த மாராடி கிராமத்திலிருந்து கட்டப்பள்ளி செல்லும் வழியில் சறுக்குபாலம் மற்றும் ஐயாறு ஓடை அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடப்பதாக, மாராடி ஊராட்சி மன்றத் தலைவர் செல்லதுரை, இந்திய விலங்குகள் நல வாரிய மாநில அலுவலர் இளங்கோவனுக்கு தகவலளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளங்கோவன், வனத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து வனக்காவலர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மயில்களுக்கு பிரேதப் பரிசோதனை
அதில் பெரும்பாலான மயில்கள் இறந்து அழுகிய நிலையில் வயல் ஓரங்களில் கிடந்தது. இறந்து கிடந்த மயில்களில், சிலவற்றைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சோபனபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பெரும்பாலான மயில்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், பல மயில்களின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
இதனால் சுமார் 50 மயில்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மயில்களுக்கு விஷம்?
மேலும், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நெல் நடவு செய்துள்ளதாலும், தற்போது கதிர் விடும் பருவம் என்பதால் நெற் பயிர்களை காப்பதற்காக மயில்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.