திருச்சி: தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி தனியார் உள் அரங்கில் இன்று(ஜன.25) அச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள், அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ விவசாய மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்துவதையும், இலவச மின்சாரத்தை அழிக்கும் மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகள் அணையைக் கட்ட வலியுறுத்தி போராடுகின்றனர்.
அதேபோல், விவசாயிகளின் வாக்கு மட்டுமே முக்கியம் என்று நினைத்துக்கொண்டு அணை பிரச்சினையில் தலையிடாமல் அமைதி காத்து வருவதை தவிர்க்க வேண்டும். போராட்டம் நடத்த முன் வராவிட்டால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 1,400 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஆன்லைன் முறையைத் தவிர்த்து நெல் கொள்முதல் நிலையங்களிலேயே பதிவு செய்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தமிழ்நாடு பகுதியான ஒகேனக்கல்லை கர்நாடக அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் தமிழ்நாடு அரசு தூங்காமல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து விவசாயிகளுடன் இணைந்து போராடவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்