திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்டது மேல் ஈச்சம்பட்டி. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சாலை வசதி செய்து தரக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதையில் உள்ள மேடு பள்ளங்களை பகுதிவாசிகளே மண் பரப்பி சீர்செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழையால், மீண்டும் பாதையானது சேறும், சகதியுமாகி போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீண்டும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஜன.14) சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்காரன்பட்டியிலிருந்து வையம்பட்டி செல்லும் சாலையில் குறுக்கே அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கையாக டிராக்டர் மூலம் மண் கொண்டு வந்து கொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் மேடு, பள்ளங்களை சீர் செய்தனர். இன்னும் இரண்டு வாரங்களில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:கருணாநிதி, ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் எம்பி!