திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மணல் அள்ள அனுமதிக்கலாம் என்று ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதை நிராகரிக்க வலியுறுத்தி திருச்சி மிளகுபாறையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலத்திற்கு இன்று பேரணியாக வந்தனர்.
அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலர் இந்திரஜித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசின் அனுமதியோடு மூன்றடி ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி அளவுக்கதிகமாக 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றை நம்பி செயல்பட்டுவரும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பாசன ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பாசனத்திற்கான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.