பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தென்னமநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணன். இவர் தற்போது பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திவான், தீரன் என இரண்டு மகன்கள்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தஞ்சையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த போது, அப்போதைய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜிடம் (கன்மேன்) பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
அப்போது தென்னமநாட்டிலிருந்து தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்திற்கு பணிக்கு வந்து கொண்டிருந்தபோது தஞ்சை கல்லணை கால்வாயில் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக சென்றுகொண்டிருந்த மாணவன் படித்துறையில் இறங்கியபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ராஜ்கண்ணன் சற்றும் தயங்காமல் ஆற்றில் குதித்து மாணவனை காப்பாற்றினார்.
பிரதமரின் உயிர் காக்கும் விருது - மகிழ்ச்சியில் முதல்நிலை காவலர் பின்பு பணிக்குச் சென்ற அவர் காலதாமதத்திற்கான காரணத்தை அப்போதைய காவல் கண்காணிப்பாளர் தர்மராஜிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் உயிர் காக்கும் விருதுக்காக பரிந்துரை செய்யும்படி தர்மராஜ் கேட்டுக்கொண்டார்.
அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பையன் பிரதமரின் விருதுக்கு பரிந்துரை செய்ததையடுத்து கடந்த 2018-19 ஆம் ஆண்டிற்கான உயிர்காக்கும் பிரதமர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 22 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காவலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக காவலர் ராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தனது பணிக்கு சிறப்பு தேடித் தரும் எனவும், அனைத்து காவலர்களும் எந்த நேரத்திலும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க :ஆறுதல் செய்தி: வெகுவாகக் குறையும் கரோனா உயிரிழப்பு