சென்னை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக பள்ளிக்கு வரும் 1ஆம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோரும் அமர்ந்து அவர்களை கவனிக்க அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிக்கு புதிதாக வரும் 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரியாது. அதன் காரணமாக குழந்தைகளுடன் பெற்றோரும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படும்.
பெற்றோர் குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து அவர்களை கவனிக்கலாம். நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்துகொள்ள முடியாத குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடலாம். நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று கட்டாயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தனியார் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை!