மதுரை:திருச்சி ராஜகோபால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,’’தஞ்சாவூர் திருமலைசமுத்திரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாஸ்திரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இது அரசின் சிறைத் துறைக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்தன. அந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இதை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல கட்டங்களாக, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இறுதியாக, நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. ஆக்கிரமிப்புக்குள்ளான 20 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்துவிட்டு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனக் குறிப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை