தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் "தொலைநோக்கு 2019" என்ற கருத்தரங்கம் நேற்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதன்பின் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம், செயலாளர் செல்வராஜ், கே7 நிறுவன முதன்மைச் செயல்அலுவலர் புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், "மதுரை, சென்னை, கோவையிலும் இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டு பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறப்படும். பெருநிறுவனங்களில் 45 லட்சம் பொறியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 விழுக்காடு மென்பொருள்களை தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள்தான் உருவாக்கின. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் பணி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைத்தது.
ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அவர்களும் புதிய புதிய தொழில்நுட்பத்தை ஆண்டுதோறும் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அனைத்துக் கல்லூரிகளிலும் அளிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
'பொறியியல் படிப்புக்கு மவுசு குறையவில்லை'-கல்லூரி கூட்டமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற தவறான பரப்புரை ஊடகங்கள் மூலம் பரவுவதால் லட்சக்கணக்கானோர் மனதில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.
அதோடு பொறியியல் படித்தவர்கள் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் தகவல் பகிரப்படுகிறது. இதனால் இந்தத் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பொறியியல் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்றனர்.