கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம்,அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
இதில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், மற்ற மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி வந்தனர். இது தொடர்பாக கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து சுருக்குமடி வலைக்கு அனுமதி கிடைக்காததால், இன்று முதல் தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என்று தீர்மானித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தேவனாம்பட்டினத்தில் 200 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.