திருச்சி: கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கல்வித்துறை செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 17) நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
மரத்தடி பள்ளிகளுக்கு முன்னுரிமை:கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'இந்த கூட்டத்தில் பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை என்பது, உட்கட்டமைப்பு வசதிகள்தான். ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைப்படும் கட்டடங்கள், இடிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளைக் கேட்டுள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி வந்தவுடன் மரத்தடியில் செயல்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 'படிக்கலாம் வாருங்கள்,வெளிநாடு பறக்கலாம் வாருங்கள்' என்ற முன்னெடுப்பின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் புத்தகம் எடுத்து வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கலாம்.
''என்னடா... அன்பில் பேரனுக்கு வந்த சோதனை..'':படித்து அதன் மூலம் அவர்கள் எழுதுகிற விமர்சனமாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் அதில் சிறந்த மாணவர்களாக சுமார் 114 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மாநில அளவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் உரையாட வைத்து, அதில் இருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வெளிநாடு கூட்டிச்செல்லும் திட்டத்திற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மரத்தடியின் கீழ், நடைபெறும் சுமார் 2500 பள்ளிகளைக்கண்டறிந்து, வரும் பணத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.
சமூக வலைதளத்தில் ஒரு ஹேஷ்டேகை கண்டேன். அதைப் பார்த்து, என்னடா... அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை என்று நினைத்துக்கொண்டேன். இதில் விவாதம் செய்த நண்பர்கள், ஆதரவு தெரிவித்த நண்பர்கள், கோரிக்கையாக அறிவுரை சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.