திருப்பூர்: திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியுள்ளனர்.
சிறுவர்கள் நேற்று இரவு உணவாக ரசமும், லட்டும் உண்டுள்ளனர். இதனையடுத்து இரவு முதலே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கு பணியில் இருந்த வார்டன் ஒரு சில சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்குச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதில் இருந்த மருத்துவர்கள், சிறுவர்களின் நிலையைக் கண்காணித்து உடனடியாக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
இதனிடைய காப்பகத்தில் மருத்துவர்கள் குழந்தைகளைப் பரிசோதிக்கும்போது அங்கு மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கெனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து, சிகிச்சைப்பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத் அன்பு, 'முதல் கட்டமாக சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப்பெற்று வரும் சிறுவர்களின் சிறுநீர், மலம் ஆகியவையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும்.
ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பக நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்பொழுது சிகிச்சைப்பெற்று வரும் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை