தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தங்கை மரணம்! இணை பிரியா தொப்புள் கொடி உறவு! - காளியப்பன் அண்ணன்

பணமே பிரதானம் என்றாகி விட்ட இன்றைய நவீன உலகில் பாசம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எள்ளளவு இடம் கூட விட்டு தரமாட்டேன் என்று, ரத்த உறவுகளே நீதிமன்றங்களுக்கு அலையும் காலமல்லவா இது. பாசமலர் திரைகாவியத்தை மிஞ்சும் அளவுக்கு அண்ணன்-தங்கை பாசம் இன்றும் உள்ளது என்பதை ஒரு அண்ணன்-தங்கை தங்களது சாவில் நிரூபித்துள்ளனர்.

thiruppur brother sister death
thiruppur brother sister death

By

Published : Sep 17, 2020, 2:56 PM IST

திருப்பூர்: குண்டடம் அருகே 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 101). பேரன், பேத்திகள் உடன் காளியப்பன் தனது மகனின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவருடைய தங்கை நல்லாத்தாள் (98). இவரும் அதே ஊரில் பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்தார். அண்ணன்-தங்கை இருவரும் பரஸ்பரம் அதீத பாசம் கொண்டிருந்தனர்.

இச்சூழலில் ஆறு மாதத்திற்கு முன் காளியப்பன், நல்லாத்தாள் ஆகிய இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது நல்லாத்தாள், என் அண்ணனும் நானும் ஒரே நாளில் இறந்து விடுவோம். அப்போது எங்களது உடலை அருகருகே புதைத்துவிடுங்கள் என கூறியுள்ளார். அதன்பின்னர் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

இவ்வேளையில் கடந்த வாரத்தில் மீண்டும் காளியப்பன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நல்லாத்தாளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் (செப் 15) நள்ளிரவு காளியப்பன் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப் 16) நடந்தது. அவருடைய உடலை அங்குள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர்.

காளியப்பன் இறந்துபோன தகவல் படுத்த படுக்கையாக இருந்த அவருடைய தங்கை நல்லாத்தாளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நல்லாத்தாள் அதிர்ச்சியில் நேற்று (செப் 16) நண்பகல் 12 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து நல்லாத்தாள் விரும்பியபடியே, அவரது அண்ணன் காளியப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டது.

பணமே பிரதானம் என்றாகி விட்ட இன்றைய நவீன உலகில் பாசம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எள்ளளவு இடம் கூட விட்டு தரமாட்டேன் என்று, ரத்த உறவுகளே நீதிமன்றங்களுக்கு அலையும் காலமல்லவா இது. பாசமலர் சினிமாவில் அண்ணன்-தங்கையின் பாசம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடும். அதையும் மிஞ்சிய அளவுக்கு அண்ணன்-தங்கை பாசம் இன்றும் உள்ளது என்பதை ஒரு அண்ணன்-தங்கை தங்களது சாவில் நிரூபித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details