திருப்பூர்கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் நேற்று (டிச.31) தனது 3 வயது குழந்தை புகழ்யாவுடன் தாராபுரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவருடன் குழந்தை புகழ்யாவும் சென்றிருக்கிறாள். அங்கு சென்ற சிறுமி, ஏடிஎம் வளாகத்திற்குள் கீழே சிதறிக் கிடந்த காகிதங்களைப் பார்த்தும் அதனை எடுத்து அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டுள்ளார். தொடர்ந்து, அந்தக் குப்பைத் தொட்டியை ஏடிஎம்மின் மூலையில் தள்ளி ஒழுங்குப்படுத்திவைத்தார்.
குழந்தையின் இந்தச் செயல்களை பாபு செல்போனில் காணொலியாக எடுத்து அதனைத் தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருவதுடன், குழந்தை புகழ்யாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.