திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் அருகே மேற்பதி பகுதியில் வசித்துவருபவர்கள் கிருஷ்ணன் (43), முருகம்மாள் (37) தம்பதியர். இவர்களின் மூத்த மகள் கார்த்திகை செல்வி (13) மூலனூரில் உள்ள மாதிரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார்.
வஞ்சியம்மாள் பிரிவு அருகே தனியார் தோட்டத்தில் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஆடுகள் வேலியைத் தாண்டி சென்றுகொண்டிருந்ததைக் கண்ட சிறுமி கார்த்திகை செல்வி, ஆடுகளை கையில் இருந்த தடியால் வீசி விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கையிலிருந்த தடி அருகில் இருந்த 60 அடி கிணற்றில் விழுந்துள்ளது.
30 அடி ஆழத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த தடியை சிறுமி எடுக்க முயற்சித்தபோது கால் தவறி கிணற்றில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து உறவினர்கள் தேடிப்பார்த்தபோது சிறுமி தண்ணீரில் மூழ்கி மூர்ச்சையான நிலையில் இருந்தார்.