திருப்பூர்:வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் உள்ள முறைகேடுகள் குறித்து பயனாளர்கள் கேள்வியெழுப்பியதால், அலுவலர்கள் பதில் கூறமுடியாமல் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கல்லூரிச் சாலையிலுள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே ஈரோடு மாவட்ட வீட்டு வசதி வாரியத்தின் பகுதி-2 க்கான 71 புதிய வீடுகள் கட்டும் பணி 15 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு புதிதாக கட்டப்பட்டு வரும் 71 வீடுகளுக்கான பயனாளிகள் வீடுகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தாராபுரம் சிவரஞ்சினி மண்டபத்தில் நேற்று (செப். 10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் தலா ரூ.90 ஆயிரத்து 800 ரூபாய் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்த 70க்கும் மேற்பட்ட பயனாளிகள் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் தங்கள் வீடுகளை தேர்வு செய்வதற்காக ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
தாராபுரம் சார் ஆட்சியர் பவன் குமார் முன்னிலையில், ஈரோடு மாவட்ட வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி தலைமையில் புதிய வீடுகளுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் குலுக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 71 வீடுகள் புதிதாக கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு அதற்கான முன்பணத்தையும் பயனாளிகள் செலுத்தியுள்ள நிலையில், 36 வீடுகளுக்கான குலுக்கல் மட்டும் நடைபெற்றது. அந்தவகையில் பெயர் எழுதப்பட்ட சீட்டுகள் குடத்தில் போடப்பட்டு ஒவ்வொரு பயனாளிகளாக மேடைக்கு வந்து சீட்டுகளை எடுத்தனர்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு பயனாளிகளுக்கு வந்துள்ள துண்டு சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணின் படி அதற்கான வரைபடத்தை பார்வையிட்டபோது 36 வீடுகளும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்படும் கடைசி வரிசை பகுதிகளில் இடம்பெற்றிருப்பது கண்டு பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். சாலையின் ஓரம் முகப்பு பகுதியிலுள்ள இடங்களில் கட்டப்பட்டு வரும் எந்த வீடுகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகளின் பெயருக்கு ஒதுக்கப்படவில்லை.
பிரதான சாலையில் முகப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட வீடுகள் யாருக்காக ஒதுக்கி வைத்து கட்டப்பட்டு வருகிறது? இதில் நடந்துள்ள குளறுபடிகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் இடத்தின் வெளிச்சந்தை மதிப்பு ஒரு சென்ட்க்கு ரூ 4 லட்சம் இருக்கும். தலா 1.75 சென்ட் அளவில் கட்டப்படும் வீட்டின் நில மதிப்பு அதிகபட்சம் 10 லட்ச ரூபாய் வரும்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு ஆனால் ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா ரூ 20 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தை மதிப்பீட்டை விட பலமடங்கு அதிகமாக உள்ளதாகவும் கூறி நடைபெற்றுள்ள முறைகேட்டை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து, பயனாளிகள் வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூற முடியாத மேற்பார்வை பொறியாளர் இது குறித்து உயர் அலுவலர்களிடம் தான் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு நிகழ்ச்சி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டதாகவும், மறு அறிவிப்புக்கு பின்னரே பயனாளிகள் தேர்வு நடைபெறும் என கூறிவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தை விட்டு அவசரமாக நழுவ முயன்றார். அப்போது விரைந்து சென்ற பயனாளிகள் அவர் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு இதனைத்தொடர்ந்து ஈரோடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி மேற்கொண்டு பதில் கூறமுடியாமல் தனது வாகனத்தில் விரைந்து சென்றார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.