திருப்பூரைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகேயன் இணையரின் மகன் ஜஸ்மித். 3 வயது மட்டுமே நிரம்பிய ஜஸ்மித் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு அசத்தி வருகிறார். இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை வெறும் 42 விநாடிகளில் கூறும் இச்சிறுவன், 20க்கும் மேற்பட்ட திருக்குறள்களையும், முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்களின் பெயர்களையும் மிகச்சரியாக கூறி மெய்சிலிரிக்க வைக்கிறார். இதற்கு முன்னால் 48 வினாடிகளில் சிறுமி ஒருவர் அனைத்து மாநில தலைநகரங்களையும் கூறிய நிலையில், ஜஸ்மித்தின் இத்திறமையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கப்பட்டு வருகிறது.
ஜஸ்மித் இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போது, அவரது அம்மாவிடம் செல்ஃபோனை காட்டச்சொல்லி அடம்பிடித்திருக்கிறார். அப்போது ஜஸ்மித்தை அதிலிருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார் அவரது அம்மா கெளசல்யா. ஏதேதோ புதிது புதிதாக காதில் விழுவதில் ஆர்வமடைந்த ஜஸ்மித்துக்கு, அதன்பிறகு நிறைய கற்றுக்கொடுக்க தொடங்கியுள்ளார். அந்த ஆர்வம் தற்போது தமிழ் இலக்கியங்களையும் சிறுவன் ஜஸ்மித்துக்கு கற்று கொடுக்க வைத்துள்ளதாக பெருமைப்படுகிறார் கௌசல்யா.