திருப்பூர்: தாராபுரத்தில் எல். முருகன் உள்பட 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி குறித்து பேசிய அவர், முதலமைச்சரின் தாய் மீதான விமர்சனத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில், “வெற்றி வேல், வீரவேல்” என தனது பேச்சை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
முதலமைச்சரின் தாய் மீதான விமர்சனம்; திமுக- காங்கிரஸிற்கு பிரதமர் மோடி கண்டனம்! தமிழ்நாட்டின் பழமையான நகருக்கு வந்ததில் பெருமையடைகிறேன். இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள். நாங்கள் உங்களிடத்தில் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து வாக்குகளை கேட்கிறோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உத்வேகத்தை பெற்று வாக்கு கேட்கிறோம். விவசாயிகள், ஏழைகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு வாய்ப்பை கேட்கிறோம். நெடுங்காலமாக இங்கு ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இது விரைவில் நிறைவேற்றப்படும்.
இது கொடிகாத்த திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை போன்ற வீரர்களை கொண்ட மண். காங்கிரஸ் திமுக கட்சிகளுக்கு குடும்பம்தான் முக்கியம். திமுக காங்கிரஸ் தலைவர்களே உங்களின் பிரதிநிதிகளின் பேச்சை கட்டுப்படுத்துங்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், பெண்களை தவறாக பேசாதீர்கள்.
முதலமைச்சரின் தாயை அவதூறாக பேசியிருக்கிறீர்கள், திமுகவில் மேலும் சிலர் அருவருக்கத்தக்க கருத்துக்களை பேசியிருக்கிறார். இதனை திமுக தடுக்கவில்லை. திமுகவின் இளவரசரும் (உதயநிதி) அதே செயலை தொடர்ந்து செய்துவருகிறார். அதையும் திமுக தடுப்பதில்லை. திமுக, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்பட்டன.
இவர்களின் நட்பு கட்சி, ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது. 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் அம்மா ஜெயலலிதாவை நடத்திய விதம் மறக்க முடியாது. பெண்களை இழிவுபடுத்துவது திமுக காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம். அதை நீங்கள் மறவாதீர்கள். தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (ஆவாஸ் யோஜானா) கிராமப்புற பகுதிகளில் 3 லட்சம் வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. மகப்பேறு , பேறுகால உதவியில் 10 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவுப்படுத்தி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவை மறைமுகமாக 2ஜி ஏவுகணை என்று வர்ணித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து பெரும் கரகோஷம் ஒலித்தது.
இதையும் படிங்க : தாராபுரத்தில் நடக்கும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி