தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுப்பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம்: உழவர்கள் போராட்டம் - தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்

திருப்பூர்: பல்லடம் அருகே வாவிபாளையம் கிராமத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கிராமத்தின் மற்றொரு பகுதியில் மாற்றுப்பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதை எதிர்த்து உழவர்கள் போராட்டம் நடத்தினர்.

farmers
farmers

By

Published : Apr 16, 2021, 11:53 AM IST

மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் மேற்கு, வட மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விளைநிலம் வழியாகச் செயல்படுத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.

உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலுவலர்களுடன் உழவர்கள் வாக்குவாதம்

இதனால் பாதிக்கப்பட்ட உழவர்கள், வேளாண் நிலம் வழியாக உயர்மின் கோபுரங்கள் கொண்டுசெல்வதற்குப் பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அலுவலர்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து தற்போது உயர்மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் தலைமையில், பவர்கிரீட் நிறுவன அலுவலர்கள் தொடங்கினர்.

இதனையறிந்த அப்பகுதி உழவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர், பவர்கிரீட் அலுவலர்களை முற்றுகையிட்டனர். ஏற்கனவே வேளாண் விளைநிலம் இழந்த நிலையில் மீண்டும் நிலத்தை இழக்க முடியாது எனவும் அளவீட்டுப் பணியை செய்ய விடமாட்டோம் எனக் கூறி உழவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அரசு அலுவலர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் காவல் துறை கூறியது. ஆனால் கண்டிப்பாக எங்கள் பகுதியில் அளவீட்டுப் பணிகள் செய்யக் கூடாது என உழவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.

ABOUT THE AUTHOR

...view details