சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து சந்தேகமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி உயர் காவல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.