தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுதல், நிதிநிலை ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சரக்கு கையாளும் திறன்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு 2020-21-ல் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் விழுக்காடு குறைவாகும். இறக்குமதியை பொருத்தவரையில் 22.53 மில்லியன் டன்களும் (70.86%), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.18 மில்லியன் டன்களும் (28.90%) , சரக்குபரிமாற்றம் 0.08 மில்லியன் டன் (0.24%) கையாண்டுள்ளது. மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2020-21 நிதியாண்டில் 7.62 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 டி.இ.யுக்களை ஒப்பிடுகையில் 5.22% குறைவாகும்.
கரோனா தொற்று உலமெங்கும், கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களில் ஏற்படுத்திய நெருக்கடியால் 2020-21 நிதியாண்டில் துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் 2019-20 நிதியாண்டை விட குறைவாக இருந்தாலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அதன்படி,106.54 லட்சம் உள்நாட்டு சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 102.69 லட்சம் டன் சரக்குகளை கடந்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலுள்ள பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குபெட்டக முனையமானது ஒரே சரக்குபெட்டக கப்பலில் இருந்து 4,413 டி.இ.யு சரக்குபெட்டகங்களை கையாண்டு, முந்தைய சாதனையான 3,979 டி.இ.யு சரக்குபெட்டகங்கள் என்பதை முறியடித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கப்பல் சரக்கு தளம் -9ல், 56,687 டன் நிலக்கரியை 24மணி நேரத்தில் கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான 55,785 டன்களை முறியடித்தது. ஒரே நாளில் 5,628 டி.இ.யு சரக்குபெட்டகங்களை கையாண்டு, இதற்கு முன்பு 4,524 டி.இ.யு சரக்குபெட்டகங்களை கையாண்ட சாதனையை முறியடித்தது. ஒரே நாளில் 1,89,395 டன் சரக்குகளை கையாண்டு, முந்தைய சாதனையான 1,80,597 டன்களை விட அதிகமாக கையாண்டு சாதனை படைத்தது. இந்திய தயாரிப்பில் உருவான 74.90 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகுகளை கையாண்டு, இதற்கு முன்பு 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்ட சாதனையை முறியடித்துள்ளது. சரக்குபெட்டக முனையத்தில் ஒரே மாதத்தில் 81,013 டி.இ.யு. சரக்குபெட்டகளை கையாண்டு, இதற்கு முன்பு கையாண்ட சாதனையை முறியடித்தது.
நிதிநிலை செயல்பாடுவ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2020-21 நிதியாண்டு வருவாய் ரூ. 549.51 கோடி ஆகும். 2020-21 நிதியாண்டு உபரி வருவாய் ரூபாய் 322.63 கோடி ஆகும். 2020-21 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 113.72 கோடி ஆகும்.
திட்டங்கள்வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூபாய் 64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கும் நிலை உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூபாய் 15.24 கோடி செலவில் துறைமுகம் செயல்படுத்த உள்ளது. தற்போது துறைமுக நுழைவு வாயில் 48மீட்டர் நீளம் மற்றும் 310 மீட்டர் அகலம் கொண்டதாகும்.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களின் போக்குவரத்தின் அதிகரிப்பு அவசியத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது சரக்குபெட்டக முனையம் அரசு-தனியார் கூட்டமைப்பின்கீழ் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தில் 100 சரக்குபெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூபாய் 47 கோடி செலவில் நிறுவும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. எரிவாயு மற்றும் எரிப்பொருள் தயாரிப்புகளை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்யும் வண்ணம் தீயணைப்பான் அமைப்பு ரூபாய் 17.50 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்த உள்ளது. இந்திய பெருந்துறைமுகங்களில் முதல் பசுமை துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விரைவில் திகழ உள்ளது. இதன்படி 5 மெகாவாட் தரை சார்ந்த சூரியமின் சக்தி ஆலை ரூபாய் 19.81 கோடி செலவில் நிறுவ உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை சூரியமின்சக்தி ஆலைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்றொரு 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை எரிசக்தி திட்டமானது விரைவில் நிறுவப்பட உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடல் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது