தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக, அரைஸ் ஸ்டீல் நிறுவனத்தின் ஆதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் ஒன்பதாவது அகில இந்திய கல்லூரிகள் அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கூடைப்பந்து போட்டிகள், தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தூத்துக்குடியில் 9ஆவது தேசிய கூடைப்பந்து போட்டி
தூத்துக்குடி: அகில இந்திய கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் இந்துஸ்தான் கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிவாகை சூடியுள்ளது.
இப்போட்டிகள் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சென்னை லயோலா, பெங்களூர் ஜெயின், கேரளா மார் இவோனியாஸ் கல்லூரி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியைத் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் பிரம்மானந்தம் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.
இதில் பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும், எத்திராஜ் கல்லூரி அணியும் மோதின. முடிவில் 25 - 57 புள்ளிகள் பெற்று சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் - ஜெயின் யுனிவர்சிட்டி அணிகளும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 54 – 60 புள்ளிகள் பெற்று லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியானது 21ஆம் தேதி நடைபெறுகிறது.