தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பல அதிரடி திருப்பங்கள் இந்த வழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், நீலகிரி மாவட்டத்துக்கும், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் தூத்துக்குடியில் பொறுப்பேற்பார் என தெரிகிறது. இதனிடையே, காலியாக இருந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிகளுக்கும் புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி மாவட்ட பெண்கள், குழந்தைக்கு எதிரான குற்ற விசாரணை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ராமநாதன், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்!