தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சைப் பிரிவினை பார்வையிட்டு நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்யும் நிலை உள்ளதால் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மழைநீர் தேங்குவது, நன்னீர் தேங்கி நிற்பதும் சவாலாக இருந்து வருகிறது. தூத்துக்குடியில் கூட பலர் காய்ச்சல் மற்றும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.