தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயம்பட்டு கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வமிதிஸ் என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த செல்வமிதிஸ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது தாயார் கயல்விழி (53), மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற எனது மகன் ஜஸ்டின் காவலர்களால் தாக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக எனது மகன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். பெரும் மருத்துவ முயற்சியின் காரணமாக கோமாவிலிருந்து மீண்டுவந்தவர், சிறிது காலத்திலேயே உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.
ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதிஸ் அடுத்த சில மாதங்களில் எனது கடைசி மகனும் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களை இழந்து தவித்துவருகிறேன். அடுத்தடுத்த இழப்புகளால் நிலை குலைந்துபோனேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நிற்கிறேன்.
எனது மகன் செல்வமிதிஸ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயம்பட்டு இறந்தது தொடர்பாக ஒருநபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி, உரிய நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
ஜஸ்டின் செல்வமிதிஸ் தாயார் பேட்டி ஆனால் தற்போதுவரை அந்தப் பரிந்துரையை அரசு செயல்படுத்தவில்லை. எனவே, ஒருநபர் ஆணையத்தின் பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் ஏற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.