தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையிலும், மக்கள் மனதில் இன்னும் வடுவாகப் பதிந்துபோனது அந்நிகழ்வு. அதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் வெடித்த போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி எனப் பல கலகங்களை உண்டாக்கி இருக்கிறது.
இந்நிலையில், 13 அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்று இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதற்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று காவல்துறை அனுமதியுடன் நடைபெறுகிறது. இதற்காகப் பல அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் காவல் துறையினர் தலைவர்கள் பலரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.