தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு: மூவரின் பிணை மனு தள்ளுபடி - judicial magistrate Bharathidasan

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில் தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி

By

Published : Aug 25, 2020, 8:57 PM IST

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சிறையில் உள்ள தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகாரில் சாட்சியாக கையெழுத்திட்டதைத் தவிர வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் மூவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், கடுமையான காயங்கள் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரிடம் விசாரித்த நிலையில், தாங்கள் தற்போது வரை 35 பேரிடம் விசாரித்துள்ளதாகவும், விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

பிணை கேட்கும் மூவரும் ஜெயராஜ்-பென்னிக்ஸின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என்பதால் பிணை வழங்கக் கூடாது என மத்திய புலனாய்வு அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிணை வழங்கக் கூடாது என ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், தற்போது பிணை வழங்குவது இயலாது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுக்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா? வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details