தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடியில் ரவுடி சுட்டுக்கொலை - தூத்துக்குடி போலீசின் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் பல நாள்களாக கண்ணில் சிக்காமல் போக்குக் காட்டி வந்த ரவுடியை காவல் துறையினர் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை
ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

By

Published : Oct 15, 2021, 6:50 PM IST

Updated : Oct 15, 2021, 7:48 PM IST

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (40). இவர் மீது தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏழு கொலை வழக்குகள், வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது தொடர்பாக துரைமுருகனை கைது செய்ய காவல் துறையினர் முயற்சித்தனர். ஆனால், தொடர்ந்து அவர் காவல் துறையினரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்தார். இந்நிலையில், துரைமுருகன் கடந்த வாரம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு தனது நண்பர் விஜய்யுடன் சென்றுள்ளார்.

அங்கு, விஜய்யின் நண்பர் ஜெகதீஷ் (23) என்பவருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஜெகதீஷை காரில் கடத்திச் சென்ற துரைமுருகனும், விஜய்யும் அவரை கொலை செய்து திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்திலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

மது போதையில் கொலை

இதையடுத்து, ஜெகதீஷ் காணாமல் போனது தொடர்பாக அவருடைய தந்தை முருகேசன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஜெகதீஷை தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்த விஜய், துரைமுருகன் ஆகியோர் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

இதைத்தொடர்ந்து விஜய், துரைமுருகன் ஆகியோரை காவல் துறையினர் தேடி தூத்துக்குடி வந்தனர். இதை தெரிந்துகொண்ட அவர்கள் வீட்டிலிருந்து தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து விஜய்யின் செல்போன் எண் மூலம் ஆய்வு செய்த காவல் துறையினர் நெல்லையைச் சேர்ந்த ஜோயலுடன் சம்பவ நாளன்று அடிக்கடி பேசியது தெரியவந்தது.

இதையடுத்து ஜோயலை பிடித்து விசாரணை செய்ததில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஜெகதீசை கொலை செய்து டக்கரம்மாள்புரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜெகதீஷின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவர்களால் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

குற்றவாளியை மடக்கிப் பிடித்த காவல் துறை

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரைமுருகன், விஜய்யை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், துரைமுருகன் முத்தையாபுரத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படையினர் உதவி காவல் ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் துரைமுருகனை பிடிக்க விரைந்து சென்றனர். அப்போது அவரை சுற்றி வளைத்த காவல் துறையினர் சரணடையும்படி கூறியுள்ளனர்.

சுட்டுக்கொலை

இதை ஏற்க மறுத்த துரைமுருகன் தனி படையைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜபிரபு, ஆயுதப்படை காவலர் டேவிட் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மூர்க்கத்தனமாக காவல் துறையினரிடம் மோதலில் ஈடுபட்ட துரைமுருகனை, தற்காப்புக்காக காவல் துறையினர் சுட்டத்தில் அவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து துரைமுருகனின் உடல் உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காயம் அடைந்த போலீசார் இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை

Last Updated : Oct 15, 2021, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details